வேடசந்தூரில் தர்கா உண்டியலில் பணம் திருட்டு


வேடசந்தூரில்  தர்கா உண்டியலில் பணம் திருட்டு
x

வேடசந்தூரில் தா்கா உண்டியலில பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

திண்டுக்கல்

வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரபு அவுலியா தர்கா உள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் உரூஸ் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தர்காவுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஜன்னல் பகுதியில் ஜாக்கியை வைத்து கம்பிகளை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் முயற்சி தோல்வி அடையவே, ஜாக்கியை அங்கேயே விட்டு விட்டு தர்காவின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த உண்டியலை கள்ளச்சாவி மூலம் திறந்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். இன்று காலை தர்காவுக்கு வந்தவர்கள், உண்டியலில் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தர்காவில் இருந்த உண்டியல், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதன்பிறகு உண்டியலை திறந்து பணம் எடுக்கவில்லை. எனவே உண்டியலில் பல ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தர்காவில் இருந்து ஒருவர் வெளியேறும் காட்சியை போலீசார் பார்த்தனர். உடனே அதில் உள்ள நபரின் புகைப்படத்தை எடுத்த போலீசார், வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புகைப்படத்தில் உள்ள நபர் பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றித்திரிவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர் கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள சாம்சாத் (வயது 35) என்பதும், தர்காவில் திருடியது அவர் தான் என்பதும் தெரியவந்தது.


Next Story