ரூ.25 லட்சத்தில் முதியோர் இல்ல புதிய கட்டிடம் திறப்பு விழா


ரூ.25 லட்சத்தில் முதியோர் இல்ல புதிய கட்டிடம் திறப்பு விழா
x

ஏர்வாடியில் ரூ.25 லட்சத்தில் முதியோர் இல்ல புதிய கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

ஏர்வாடி முதியோர் புதுவாழ்வு இல்லத்தில் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மைக்கேல் ஜார்ஜ் என்பவர் தனது பெற்றோர் பிரான்சிஸ்- சந்தனத்தம்மாள் நினைவாக ரூ.25 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்கி, கட்டிட பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடந்தது. முதியோர் இல்ல நிறுவனர் தங்கராஜ் தலைமை தாங்கினார். முதியோர் இல்ல தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜேக்கப் புஷ்பநாதன் வரவேற்றார். கிழவனேரி பங்குத்தந்தை அமலதாஸ், ஏர்வாடி பங்குத்தந்தை கிராஸிஸ் மைக்கேல் ஆகியோர் புதிய கட்டிடத்தை அர்ச்சித்தனர்.

சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதியோர் இல்ல புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், "முதியோர் இல்லங்களில் சேவை செய்வதை பலர் பெருமையாக எண்ணுகின்றனர். சொந்த பணத்தை அதற்கு கொடுத்து பெருமைப்படுவதோடு மட்டுமில்லாமல் அவர்களும் மனநிறைவு அடைகிறார்கள். சாமானிய மக்களுக்கு சேவை செய்து மனநிறைவு அடைந்து, அதில் கிடைக்கும் சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்" என்றார்.

விழாவில் களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், முதியோர் இல்ல முன்னாள் நிர்வாகிகள் சாமுவேல், ஜெபமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் கங்காதரன் நன்றி கூறினார்.


Next Story