திருச்செந்தூர் பி.ஜி.ஆஸ்பத்திரியில்ரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு விழா
திருச்செந்தூர் பி.ஜி.ஆஸ்பத்திரியில்ரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பி.ஜி. ஆஸ்பத்திரியில் ரத்த சுத்திகரிப்பு மையம் (ஹீமோடயாலிசிஸ்) மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சைப் பிரிவு (நியூரோ இம்மியூனோதெரபி) திறப்பு விழா நடந்தது. விழாவில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்று பேசினார். நரம்பியல் நிபுணர் குகன் ராமமூர்த்தி, மகப்பேறு சிறப்பு டாக்டர் மலர்விழி குகன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து பேசினர். பின்னர் டாக்டர் ஜெயா நிவாஸ், பி.ஜி. சிறுநீரகத் துறையின் நோக்கம் குறித்து பேசினார்.
தொடர்ந்து டாக்டர்கள் தம்பிராஜ், சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ சங்க திருச்செந்தூர் கிளை செயலாளர் டாக்டர் வெற்றிவேல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். இதில் தீவிர சிறுநீரக கோளாறுகளுக்கான சிகிச்சையில் ஹீமோடயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு மிகவும் பயன் தருவதாகும். மேலும் மாற்று சிறுநீரகம் பெறுவோர்க்கும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும். மேலும், 35 படுக்கை வசதி கொண்ட இந்த ஆஸ்பத்திரி என். ஏ. பி. எச். எனும் தேசிய அங்கீகாரம் பெற்றதாகும். இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இயங்கும் பரிசோதனை கூடம் என். ஏ. பி. எல். போன்ற ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இங்கு அல்ட்ராசவுண்ட், எக்கோ கார்டியோகிராப், டிரெட் மில், லிதோ டிரிப்ஸி, நவீன டிஜிட்டல் எம்.ஆர்.ஐ, சி. டி. ஸ்கேன் வசதிகளும் உள்ளன. இந்த ஆஸ்பத்திரியின் நரம்பியல் துறையில் செயல்படும் நவீன பக்கவாத சிகிச்சை, நரம்பியல் புனரமைப்பு, நரம்பியல் எலெக்ட்ரோ பிஸியாலஜி போன்றவை நரம்பியல் நிபுணரின் நேரடி பார்வையில் செயல்படுகிறது. இங்கு நரம்பியல் இம்மியூனோதெரபியில் பிளாஸ்மா மாற்றம் செய்து நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு கோளாறுகளை சரி செய்யும் வசதி இருக்கிறது. விழாவில், டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல் ஆனந்த், நடேசன், பாவநாசகுமார், கிஸார், நர்கீஸ் பானு, கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, இஸ்மாயில், உமர் ஷாஹித், ஜாபர் சாதிக், இத்திரிஸ், சரவணமுத்து மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.