பூலாம்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை


பூலாம்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை
x

பூலாம்பட்டியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து உள்ளது.

சேலம்

எடப்பாடி,

நெல் கொள்முதல் நிலையம்

பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், கோல்நாயக்கன்பட்டி, பில்லுக்குறிச்சி, மோளப்பாறை, நாவிதன்குட்டை, கோனேரிப்பட்டி, நெடுங்குளம் உள்ளிட்ட காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை காரணமாக போதிய நீர் கிடைத்ததால் அதிகளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.

தற்போது இந்த பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருவதால் விவசாயிகள் நலன் கருதி பூலாம்பட்டி, கோல்நாயக்கன்பட்டி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை நேரில் சந்தித்து சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பூலாம்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று பூலாம்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

விலை நிலவரம்

இதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக சேலம் மண்டல மேலாளர் கந்தசாமி கூறியதாவது:-

காவிரி பாசன பகுதியில் நெல் அறுவடை பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், பூலாம்பட்டியில் அரசின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 வரையிலும் பிறகு மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரையிலும் நெல் கொள்முதல் செய்யப்படும்.

40 கிலோ 580 கிராம் எடை கொண்ட ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.2,060-க்கும் அதற்கான ஊக்கத்தொகையாக ரூ.100 உடன் சேர்த்து ஒரு குவிண்டால் ரூ.2,160-க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இதே போல் பொதுவான வகை நெல் ரகங்கள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,040-க்கும், அதற்கான ஊக்கத்தொகை ரூ.75 உடன் சேர்த்து ரூ.2,115க்கு கொள்முதல் செய்யப்படும்.

வங்கி பண பரிவர்த்தனை

மேலும் ஈரப்பதம் 17 சதவீதம் வரை உள்ள தரமான நெல்லை எந்தவித பணப்பிடித்தமும் இன்றி கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை வங்கி பண பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும். இந்த சந்தர்ப்பத்தை காவிரி பாசன பகுதி விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நிகழ்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் கோவிந்தராஜு, பூலாம்பட்டி பேரூராட்சி தலைவர் அழகுத்துரை, துணைத்தலைவர் முரளி, பழனிசாமி, தேவராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story