இடி மழை உதயன் நினைவு இல்லம் திறப்பு
திருமானூர் அருகே இடி மழை உதயன் நினைவு இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுபனங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இடி மழை உதயன் என்பவர் கடந்த 1993-ம் ஆண்டு வைகோவை தி.மு.க.விலிருந்து நீக்கியதை கண்டித்து திருமானூர் பஸ் நிலையத்தில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் ம.தி.மு.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி இடி மழை உதயனின் நினைவு இல்லம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் துறை வைகோ முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமநாதன் வரவேற்றார். இடி மழை உதயனின் நினைவு இல்லத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திறந்து வைத்து அவரின் உருவப்படத்திற்கு மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க. தொண்டர்கள் லட்சியவாதிகளாகவும், பிடிப்புள்ளவர்களாகவும் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இருப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக ம.தி.மு.க. இயங்கி வருகிறது. பல போராட்டங்களையும் நடத்தி உள்ளது. தற்போது தமிழக கவர்னரை நீக்கக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட ராஜபக்சேவை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். தமிழகத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், முல்லைப்பெரியாறு அணையை பாதுகாப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு போராட்டம் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் செந்தில் அதிபன், ஈரோடு எம்.பி.கணேச மூர்த்தி, விவசாய அணி செயலாளர் வாரணாசி ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, ரோவர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏலாக்குறிச்சி சாலை உள்ள வளைவில் வைகோவுக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து காரில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.