ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா; ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்பு


ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா; ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 4:50 AM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்றனர்.

சார்பு நீதிமன்றம் திறப்பு விழா

ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்ற திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பவானி சுப்பராயன், சுந்தர், ஜெகதீஸ் சந்திரா, இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கி சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தனர்.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிபதி செல்வக்குமார், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து கருங்குளம் தனியார் திருமணமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதியரசர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த குடிமகன்

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் பேசுகையில், "ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் 165 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி நவதிருப்பதி ஸ்தலங்கள் உள்ளன. பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு சிறந்த குடிமகனாக அறியப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் பேசுகையில், "பெருமைமிகு முத்துநகரம் வணிகத்திற்கும், வாழ்க்கைக்கும் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. நீங்கள் நீதிமன்றம் என்பது வெறும் கட்டிடம் என்று நினைப்பீர்கள். அதுவல்ல. அது 150 ஆண்டு கால பழங்கால காவியம். நீதிமன்றங்களில் ஆண்களுக்கு நிகராக பெண் வழக்கறிஞர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். நீங்கள் வழக்கறிஞராக பணி செய்து மக்களுக்கு உதவி செய்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் பேசுகையில், "எப்போது ஒரு நீதி நீதியாக இருக்கும் என்றால் அது மனித உணர்வோடு சேர்த்து செய்யப்படும்போது தான். அந்த உணர்வு எப்போது அற்றுப்போகிறதோ அது நீதியாக இருக்க முடியாது. ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றமானது பல தடைகளைத் தாண்டி வந்திருக்கின்றது" என்றார். உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா பேசுகையில், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தை பொறுத்தவரையிலே 163 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட நீதிமன்றமாகும். இதன் ஆளுகை வரைமுறை விருதுநகர் மாவட்டத்தின் எல்லை வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கறிஞர்களாகிய நமக்கு சட்டப்பணிகள் மட்டுமல்லாது சமுதாயப்பணியும் தேவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், பத்மநாபபிள்ளை, ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அனந்த சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர்கள் ஜெகநாதன் ஜெபராஜா, பீஸ் ராஜன், ஜெயசிங் மதுரம், ஹரி கிருஷ்ணன், பெருமாள் பிரபு திருப்பாற்கடல், முத்துராமலிங்கம் கணேசன், ராம்குமார், ஜெயராஜ், வெங்கடாஜலபதி, சங்கரலிங்கம், கருப்பசாமி, சதீஷ், பாலமுருகன், ரமேஷ், திருப்பாற்கடல், அரசு வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story