அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா
ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடந்தது.
ராதாபுரம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்கும் வகையில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களாக மாற்றப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு திறக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது கட்டமாக தரம் உயர்த்தப்பட்ட 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதில் ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் அமைக்கப்பட்ட தொழிற்சாலை 4.0 தொழில்நுட்ப மையமும் அடங்கும். ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றினார்.
ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட சி.என்.சி. எந்திர தொழில்நுட்ப பணியாளர், அடிப்படை வடிவமைப்பாளர் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (எந்திரவியல்), உற்பத்தி கட்டுப்பாடு தன்னியக்குமயம், தொழில்துறை எந்திரவியல் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் ஆகிய தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டது.
விழாவில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் லட்சுமணன், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி, துணைத்தலைவர் பலவேசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.