பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம்
பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998- பிரிவு 84 (1)-ன்படி பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத தொகை கட்டணச்சலுகையாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். வரித்தொகையை செலுத்துவதற்கு வசதியாக நகராட்சி அலுவலக கணினி வசூல் மையங்கள், வங்கி ஏ.டி.எம். அட்டை மற்றும் கிரெடிட் அட்டைகள், காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரையாண்டு சொத்துவரியை இம்மாத இறுதிக்குள் செலுத்தி தாங்களும் பயன்அடைந்து, நகராட்சி நிர்வாகத்திற்கும் துணைபுரியுமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா தெரிவித்துள்ளார்.