இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கன மழையால் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையில் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த சுழற்சி பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த சுழற்சி பகுதியாக நிலவி வருகிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையோரம் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி மன்னார்குடா பகுதியில் நுழைந்தவாறு இன்று (சனிக்கிழமை) இரவு வலுவிழக்க கூடும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்த காற்றழுத்த சுழற்சி புதுச்சேரியில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
ரெட் அலார்ட்
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமானஅல்லது கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கன முதல் அதி கன மழை பெய்யும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடலூரில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விட்டு, விட்டு இரவு வரை பெய்தது. நள்ளிரவு கன மழை கொட்டியது. இந்த மழை இடைவிடாது நேற்றும் நீடித்து வருகிறது. இந்த தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்தார். மேலும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வியாபாரம் பாதிப்பு
மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம் தண்ணீரால் நிரம்பி குளம் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் பயிற்சி எதுவும் நடைபெறவில்லை. நடை பயிற்சி செய்ய வருவோரும் மழையால் வீட்டுக்குள் முடங்கினர். தற்காலிக உழவர் சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. பொதுமக்கள் வராததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சாலையோர வியாபாரிகள் வியாபாரம் இன்றி சிரமப்பட்டனர். சில கடைகள் அடைக்கப்பட்டன.
கடலூர் பாதிரிக்குப்பம் பொன்விளைந்த களத்தூர் மாரியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதை அறிந்த நிர்வாகிகள், அந்த நீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தவிர வன்னியர்பாளையம், மஞ்சக்குப்பம் நேருநகர், திருமலைநகர், பவுன்நகர், கூத்தப்பாக்கம் ராஜீவ்காந்திநகர், சண்முகாநகர், சக்திநகர், ஜனார்த்தனன் நகர், வானதிநகர், வேல்நகர், திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேட் பாங்க் காலனி, சரவணாநகர் இணைப்பு சாலை, குண்டுஉப்பலவாடி பத்மாவதிநகர், பெரியசாமிநகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தண்ணீர் புகுந்தது
குண்டுஉப்பலவாடி ராமசாமிநகர் பகுதியில் உள்ள 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த நீரை வடிய வைக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். சிலர் வீடுகளை பூட்டி விட்டு வெளியேறினர்.
இதேபோல் பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழையால் 3 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. ஒரு மின்கம்பம் சேதமடைந்தது. கால்நடை ஒன்றும் பலியானது.
உபரி நீர் திறப்பு
காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியை எட்டியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும், ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்பதாலும், வீராணம் ஏாியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 400 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிடப்பட்டது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 64 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 98.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக லக்கூரில் 3 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 34.34 மில்லி மீட்டர் மழை பதிவானது.