மேட்டுப்பாளையத்தில் தொடரும் சம்பவம்:இந்து முன்னணி தலைவர் வீட்டின் மீது கல் வீச்சு-கார் கண்ணாடி உடைப்பு- போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி தலைவர் வீட்டின் மீது கல் வீச்சு மற்றும் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் இந்து அமைப்பு தலைவர் வீட்டின் மீது கல் வீச்சு மற்றும் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வீடு மீது கல்வீச்சு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜ் நகர் நாடார் காலனி 2-வது வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் ரங்கசாமி என்பவரது வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ். இவர் மேட்டுப்பாளையம் நகர இந்து இளைஞர் முன்னணி மேற்கு நகர தலைவராக உள்ளார். இவர் தனது காரை வீட்டின் பக்கவாட்டில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் வீட்டில் உள்ள அனைவரும் தூங்க சென்று விட்டனர். அப்போது நள்ளிரவில் யாரோ அடையாளம் தெரியாத சில மர்ம ஆசாமிகள் வீட்டின் மீது கல் வீசிவிட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் ஆய்வு
நேற்று காலை ஹரிஷ் எழுந்து பார்த்த போது காரின் முன் பக்க கண்ணாடி உடைந்திருப்பது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து ஹரிஷ் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி, இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நாடார் காலனி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
மேலும் இந்து அமைப்பினர் சம்பவ இடத்தில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 22 -ந் தேதி நள்ளிரவு யாரோ அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் மேட்டுப்பாளையம் -காரமடை ரோட்டில் பிளைவுட் குடோன்களில் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்று உள்ளனர். மேட்டுப்பாளையம் நகரில் தொடரும் இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.