வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் சிறுமி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தாயுடன் வாய்த்தகராறு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் திவ்யதர்ஷினி (வயது 15). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் 2-வது திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் திவ்யதர்ஷினி தனது தாய் ரமணிகலாவுடன் வசித்து வந்தார்.
9-ம் வகுப்பு வரை படித்த திவ்யதர்ஷினி அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் வேலை செய்வது தொடர்பாக தாய், மகள் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தாய் ரமணிகலா வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். மன வேதனையில் வீட்டில் தனிமையில் இருந்த திவ்யதர்ஷினி வீட்டு உத்திரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் வாத்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திவ்யதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேல சீதேவிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மோகன் (23). இவர் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் டெக்கரேஷன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மோகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், மனவிரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள வயல்காட்டு கரையில் இருக்கும் புங்க மரத்தில் கயிற்றால் தூக்கு மாட்டி கொண்டார்.
இதையறிந்த அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.