வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் மருந்து, ரசாயனம், எக்கு தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரி சோதனை


வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் மருந்து, ரசாயனம், எக்கு தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரி சோதனை
x

இரும்பு, ரசாயனம், எக்கு மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட 20 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரி துறையினர் நடத்திய திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை,

இரும்பு, ரசாயனம் மற்றும் மருந்து பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் கடந்த காலங்களில் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளையும் வருமான வரித்துறையினர் ரகசியாக கண்காணித்து வந்தனர். அந்தவகையில், கவர்லால் குழுமத்தின் கீழ் செயல்படும் காவ்மன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்கள் மருந்து பொருட்கள் தயாரித்து வருகின்றன.

மருத்துவ உபகரணங்கள்

கடலூர் சிப்காட்டில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் கிடங்குகளில் சோதனை நடந்தது. இதேபோல், மாதவரம் அடுத்த நடராஜன் நகர் பகுதியில் மனிஷ் குளோபல் இண்டஸ்ட்ரிஸ் என்ற கிடங்கு உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் இறக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.

இதேபோல் மாதவரம் ரவுண்டானாவில் ஆதிஸ்வரர் எக்ஸ்பியன் என்ற மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனங்கள் மீது வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

ஆவணங்கள் பறிமுதல்

அதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ஸ்கோப் இன்கிரிடியன்ட்ஸ் நிறுவனம், வேப்பேரி, பூங்கா நகர், சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகம், அவற்றினுடைய அலுவலகங்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இரும்பு பொருட்கள், ரசாயன பொருட்கள், எக்கு மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் முறையாக வருமான வரி கட்டவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் வருமான வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையில் சுமார் 200 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சோதனை நிறைவடைந்த பிறகுதான் ஆவணங்களின் மதிப்பு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், வரி ஏய்ப்பு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறினர்.


Next Story