ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள் 2வது நாளாக சோதனை


ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள்  2வது நாளாக சோதனை
x
கோயம்புத்தூர்

கோவை

கோவையில் பிரபல குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.

பிரபல ஓட்டல்கள்

கோவையில் பல இடங்களில் பிரபல ஆனந்தாஸ் குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் இருந்து கிடைக்கும் வருமானம் குறித்து அரசுக்கு சரியான முறையில் கணக்கு கொடுக்கவில்லை என்று புகார் சென்றது.

இதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் 40 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 8 ஓட்டல்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதுபோன்று இந்த ஓட்டலின் பங்குதாரரான வடவள்ளியை சேர்ந்த பரமானந்தா என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. இரவு வரை நடந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரவில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

2-வது நாளாக சோதனை

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு மீண்டும் அந்த இடங்களுக்கு அதிகாரிகள் சென்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

9 இடங்களிலும் கணினியில் இருந்த கணக்குகளை சரிபார்த்ததுடன், ஓட்டல்களில் இருந்த பில்கள், ஆவணங்களை சரிபார்த்தனர்.

அத்துடன் அங்கிருந்த கணினியில் ஏதாவது ஆவணங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா? அதில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் சரியானதா? அல்லது கணக்குகள் குறைத்து எழுதப்பட்டு உள்ளதா என்பது குறித்து அங்கு வேலை செய்து வரும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

கோவையில் உள்ள பிரபல குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்களில் 2-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story