ரியல் எஸ்டேட், நகைக்கடை அதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
குடியாத்தம், வேலூரில் ரியல் எஸ்டேட் அதிபர், நகைக்கடை உரிமையாளர் வீடுகள், பீடி தொழிற்சாலை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம், வேலூரில் ரியல் எஸ்டேட் அதிபர், நகைக்கடை உரிமையாளர் வீடுகள், பீடி தொழிற்சாலை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரியல் எஸ்டேட், நகைக்கடைகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை பஜாரில் ஏராளமான நகைக் கடைகள் உள்ளன. இதில் ஒரு குழுமத்துக்கு சொந்தமான நகைக்கடைகள் பிரபலமாக விளங்கி வருகின்றன.
இந்த குழும தலைவர் வீடு குடியாத்தத்தில் உள்ளது. இவர்கள் வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் வீட்டு மனைகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பெரிய அளவிலான வீடுகளை கட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த குழுமத்திற்கு குடியாத்தம், வேலூர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து வருமான வரி துறையினர் 6-க்கும் மேற்பட்ட கார்களில் குடியாத்தத்தில் உள்ள சம்பந்தப்பட்ட குழும தலைவர் வீட்டிற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்காமல் அங்கு சோதனையில் ஈடுபட தொடங்கினர்.
இதேபோல் நகைக்கடை நடத்திவரும் இவரது உறவினர் வீடு குடியாத்தம் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. அந்த வீட்டிலும் நேற்று காலையில் இருந்து வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பீடி தொழிற்சாலை
குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் பகுதியில் தனியார் பீடி தொழிற்சாலை உள்ளது. பிரபலமான இந்த பீடி தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு குடியாத்தம் பகுதியில் தோல் தொழிற்சாலை, காலனி தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் நேற்று காலை இந்த தனியார் பீடி நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் பகுதியில் மட்டும் நேற்று 3 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர்
இதேபோல, வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் கொண்ட 4 குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த சோதனையையொட்டி அலுவலக பகுதியில் வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் வேலூரில் உள்ள அந்த குழுமத்துக்கு சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் கடையிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஆவணங்கள் அல்லது பணம் கைப்பற்றப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ஒரே நேரத்தில் வேலூர், குடியாத்தம் பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பாக இருந்தது.