குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x

குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நாகர்கோவில்,

தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் ராஜேந்திரன். இவர் வீடு, திருமண மண்டபம், செங்கல் சூளை மற்றும் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதோடு தொழில் அதிபருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஒப்பந்ததாரர் வீடு

இதேபோல் களியக்காவிளை அருகே கண்ணுமாமூட்டை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான ஒப்பந்ததாரர் மணிகண்டன் வீடு, அலுவலகம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடு போன்ற இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

மேலும் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நாட்டு மருந்து கடை, அலுவலகம், மருந்து தயாரிக்கும் ஆலை மற்றும் மருந்து கடை உரிமையாளரின் 2 வீடுகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஆவணங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி ஆய்வு செய்த அதிகாரிகள் பணத்தையும் கைப்பற்றி எண்ணிப்பார்த்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கடைக்குள் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது ஏராளமான பொதுமக்கள் மருந்து வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்தனர். ஆனால் கடையில் சோதனை நடந்ததால் 'கடை விடுமுறை' என்று கூறி காவலாளி திருப்பி அனுப்பிவைத்தார்.

முக்கிய ஆவணங்கள்

மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நடந்த இந்த சோதனையில் சுமார் 100 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூரில்...

இதேபோல குடியாத்தம், வேலூரில் ரியல் எஸ்டேட் அதிபர், நகைக்கடை உரிமையாளர் வீடுகள், பீடி தொழிற்சாலை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

1 More update

Next Story