கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை
கோவையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதுபோன்று ஊழியர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கோவை
கோவையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதுபோன்று ஊழியர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
5-வது நாளாக சோதனை
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். கடந்த 6-ந் தேதி இவருடைய வீடு, நிறுவனங்கள் உள்பட 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து அவர் நிர்வாக இயக்குனராக செயல்படும் கோவை பீளமேட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை இன்று 5-வது நாளாக நடந்தது. அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த ரசீதுகள், கணக்கு விவரங்கள் உள்பட அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஊழியர் வீடு
அதுபோன்று அந்த நிறுவனத்தின் மற்றொரு நிர்வாக இயக்குனரான சந்திரபிரகாசிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் வசந்தகுமார் என்பவர் வீடு கோவை குனியமுத்தூரில் உள்ளது. நேற்று இரவில் அங்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் வசந்தகுமார் வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனை இன்று காலையிலும் தொடர்ந்து நடந்தது. சோதனையின்போது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அதிகாரிகள் விசாரணை
அத்துடன் வீட்டில் இருந்த யாரையும் அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதற்கிடையே அங்கு சோதனை நடத்தப்படுவதை அறிந்த ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தெரியவில்லை. ஊழியரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளதால், பரபரப்பு நிலவி வருகிறது.