ஒப்பில்லாத அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது


ஒப்பில்லாத அம்மன்  கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 6 Jun 2023 12:42 AM IST (Updated: 6 Jun 2023 3:29 PM IST)
t-max-icont-min-icon

ஒப்பில்லாதஅம்மன் கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் ஒப்பில்லாதஅம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், சப்தகன்னிமார்கள், முத்துமணியார், கோட்டமணியார், கருப்புசாமி, சங்கிலிகருப்பு மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ளதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி கோவில் கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. கும்பாபிஷேகத்தை வரதராஜ வாத்தியார், மாணிக்க வாத்தியார் சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர். இதையொட்டி கடந்த 29-ந் தேதி காலை 9 மணிக்கு முகூர்த்தகால் நட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 5 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 9 மணி அளவில் குடிபாட்டுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து காவிரியில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இன்று (செவ்வாக்கிழமை) காலை 8.45 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜைகள், மாலை 6 மணியளவில் மூன்றாம் கால யாகபூஜைகள் தீபாராதனையும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக நான்காம் கால யாகபூஜையும், தொடர்ந்து தீபாராதனையுடன் கடம் புறப்பாடு செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஒப்பில்லாதஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் ஆலய விமான கலசத்திற்கும், 10.30 மணிக்கு ஒப்பில்லாத அம்மன், சப்த கன்னிமார்கள், முத்துமணியார், கோட்டை மணியார், கருப்புசாமி, சங்கிலி கருப்புசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட அனைத்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவில், வார்டுஉறுப்பினர்கள் மற்றும் ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், கோவை, சென்னை, மதுரை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தபாடி, சிலுவைப்பட்டி, மேலரசூர், தாப்பாய், வரகுப்பை, அலுந்தலைப்பூர், கருடமங்கலம், சரடமங்கலம், புள்ளம்பாடி, கீழரசூர், வெங்கனூர், கல்லக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், 40 உள்ளூர், வெளியூர் பங்காளிகள், கோவில் குடிபாட்டுமக்கள் செய்திருந்தனர்.


Next Story