திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?


திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
x

திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு;

திருநகரி உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

உப்பனாறு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உப்பனாறு உள்ளது. சீர்காழி அருகே கொண்டல் தலைப்பிலிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், பனமங்கலம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், திருநகரி, காரைமேடு, புதுத்துறை, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுல்லைவாசலில் கடலில் கலக்கிறது. இந்த உப்பனாறு மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது.இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உட்புகுந்து நிலத்தடி நீர் முழுவதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது. இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

30 கிராம மக்கள்

இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உப்பனாற்றில் தடுப்பணை கட்ட நபார்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கின. ரூ.30 கோடியே 96 லட்சத்தில் திருநகரியில் உப்பனாற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணிகள் தொடங்கியது. இப்பணிகள் 3 ஆண்டுகள் கடந்தும் நிறைவடையாததால் 30 கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

39 ஷட்டர்கள்

உப்பனாற்றில் சுமார் 240 மீட்டர் நீளத்துக்கு கதவணை அமைக்கப்பட்டு வரும் நிலையில் இதில் 39 ஷட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் 18 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதி உள்ள பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. பாரதி கதவணை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு எனது முயற்சியால் திருநகரி பகுதியில் கதவணை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் முடிவடையாமல் உள்ளது. வரும் மழை காலத்துக்குள் பெரும்பாலான பணிகளை முடித்து மழை நீரை தேக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story