அய்யன்கொல்லி-பாட்டவயல் இடையே சாலையோர முட்புதர்களால் விபத்துகள் அதிகரிப்பு-வாகன ஓட்டிகள் அச்சம்
அய்யன்கொல்லி- பாட்டவயல் இடையே சாலையோரம் வளர்ந்து காணப்படும் முட்புதர்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
பந்தலூர்
அய்யன்கொல்லி- பாட்டவயல் இடையே சாலையோரம் வளர்ந்து காணப்படும் முட்புதர்களால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, கோழிச்சால், நரிக்கொல்லி, அம்பலமூலா, வெள்ளேரி, வழியாக பாட்டவயலுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் கூடலூர் அரசுபோக்குவரத்து கழகம் மூலம் கூடலூர், தேவர்சோலை, நெலாக்கோட்டை, பாட்டவயல் அம்பலமூலா வழியாகவும், பந்தலூர், பொன்னானி, முக்கட்டி, நரிக்கொல்லி வழியாகவும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் ஏராளமான பள்ளி வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன்.
இதில் அய்யன்கொல்லியிலிருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் இருபுறமும் புதர்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து காணப்படுகிறது.
விபத்து அபாயம்
இதனால் அந்த சாலை ஒற்றையடி பாதை போல் காட்சி தருகிறது. இதன்காரணமாக எதிேர வரும் வாகனங்கள் தெரிவதில்லை. அதனால் அடிக்கடி அந்த சாலையில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது.
மேலும அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதேபோல் முட்புதர்களில் கரடி, யானை, சிறுத்தைகள் நின்றால் தெரிவதில்லை. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அய்யன்கொல்லி முதல் பாட்டவயல் வரை சாலையோரமுள்ள முட்புதர்கள், செடி-கொடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.