ரம்ஜான் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
ரம்ஜான் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பொள்ளாச்சி
ரம்ஜான் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மாட்டு சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சந்தை நடைபெற்றது. சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுல்லாது வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் வருகிற 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது.
வரத்து அதிகரித்தும் விலை குறையவில்லை. விவசாய தேவைகளுக்கு சிலர் மாடுகளை வாங்கி சென்றனர். மேலும் இறைச்சிக்காக கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். காங்கயம் காளை அதிகபட்சமாக ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் விற்பனை ஆனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
விற்பனை அதிகம்
கடந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு 2200 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் வருகிற 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த வாரத்தை விட வரத்து அதிகரித்து 3 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன. மேலும் கேரளாவில் இருந்து சுமார் 300 வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.
காங்கயம் காளை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரையும், பசு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையும், மொரா ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. வரத்து அதிகரித்தும் கடந்த வாரத்தை விட மாடுகள் விலையும் அதிகரித்து இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.