கொளுத்தும் வெயிலால் தண்ணீர் தேவை அதிகரிப்புகேன்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா?;சமூக ஆர்வலர்கள் கருத்து


கொளுத்தும் வெயிலால் தண்ணீர் தேவை அதிகரிப்புகேன்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா?;சமூக ஆர்வலர்கள் கருத்து
x
தினத்தந்தி 10 March 2023 3:00 AM IST (Updated: 10 March 2023 3:25 AM IST)
t-max-icont-min-icon

கொளுத்தும் வெயிலால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. கேன்களில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

ஈரோடு

"ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்" என்றார் அவ்வையார்.

"ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், நடந்து செல்வோரின் பாதங்களை ஆற்று மணல் சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் கூட, அந்த ஆறானது, ஊற்று நீரைத்தந்து, மக்களின் தாகத்தை தணிக்கிறது" என்பதற்கான பொருள்தான் இது.

ஆனால் ஆற்றங்கரையோரம் ஊற்று பறித்தும், பானைகளில் ஊற்றி வைத்தும் நீரை பருகிய காலம் கடந்து தற்போது நாம் பாட்டில்களிலும், கேன்களிலும் அடைக்கப்பட்ட தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

வெயிலின் தாக்கம்

தற்போது ெவயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஆனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வரும் வேளையில் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் கூட தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் கரைபுரண்டு ஓடிய காவிரியில் கரையை கூட தொடாமல் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வறட்சி காலங்களில் போதுமான குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதால் பெரும்பாலான மக்கள் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தான் அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த கேன்களில் அடைக்கப்படும் தண்ணீர் சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இதனை வினியோகிக்கும் முகவர்கள் தண்ணீர் கேன்களை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாத்து வழங்குகிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குளிர்பானங்கள், குடிநீர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட எந்த திரவ பொருளாக இருந்தாலும் அதனை நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைக்க கூடாது என அந்த பாட்டில்களிலேயே குறிப்பிட்டிருப்பதை காணலாம். இதில் அத்தியாவசிய பொருளான குடிநீர் கேன்களை மூடாமல் வாகனங்கள் மூலம் கொளுத்தும் வெயிலில் கொண்டு செல்வதால் அந்த குடிநீர் பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அறிவுரை வழங்க வேண்டும்

சென்னிமலை அருகே உள்ள மணிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.சுப்பிரமணியன்:-

பெரும்பாலான நகரங்களில் குடிநீர் கேன்களை சரக்கு ஆட்டோக்களில் விற்பனைக்காக கொண்டு செல்பவர்கள் மூடாமல் வெயிலில் தான் கொண்டு செல்கின்றனர். குடிநீர் கேன்களில் நேரடியாக சூரிய ஒளி படும்போது அதன் தன்மை மாறி பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. தற்போது பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி திருமணம், துக்க வீடு என அனைத்து நிகழ்வுகளிலும் குடிநீர் கேன்களை தான் வாங்கி குடிக்கின்றனர். ஆனால் வெயிலில் சூடாகி வரும் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதனால் வாகனங்களில் குடிநீர் கேன்களை கொண்டு செல்பவர்கள் ரூ.100 செலவழித்தால் கூட சாக்கு பை வாங்கி தைத்து வெயில் படாமல் மூடிவிடலாம். இதுகுறித்து குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்களிடம் வாங்கும் முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பான முறையில் தண்ணீர் கேன்கள் கொண்டு செல்ல அறிவுரை வழங்க வேண்டும்.

நச்சுத்தன்மை

மேலப்பாளையத்தை சேர்ந்த சமூக சேவகர் ஆ.சொக்கலிங்கம்:-

வசதியானவர்கள் தங்கள் வீடுகளில் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தி கொள்கிறார்கள். ஏழை-எளிய மக்கள் பொது குடிநீர் குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். இதில் கூட எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் வெயிலில் காய்ந்த கேனில் உள்ள குடிநீரை வாங்கி குடிப்பதால் தான் தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இது பலருக்கு தெரிவதில்லை. சில கடைகளில் குடிநீர் கேன்களை வெயிலிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் அந்த குடிநீர் முழுவதும் நச்சுத்தன்மை உள்ளதாக மாறும் வாய்ப்பு உள்ளது. இப்படி குடிநீர் மற்றும் குளிர்பானங்களை வெயிலில் வைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதனை வினியோகிக்கும் முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

வேண்டுகோள் விடுப்பேன்

சென்னிமலையில் குடிநீர் கேன்கள் விற்பனை செய்து வரும் கே.ஈஸ்வரமூர்த்தி:-

குடிநீர் கேன்களை வெயிலில் வைத்தால் அந்த நீரில் நச்சுத்தன்மை ஏற்படும் என்பது எனக்கு தெரியாமல் தான் இருந்தது. ஆனாலும் நான் வெயிலில் வைப்பதில்லை. எங்கள் கடைக்கு வாகனங்களில் வரும் குடிநீர் கேன்கள் சில நேரம் சூடாக இருப்பதுண்டு. அதனால் நான் இனிமேல் குடிநீர் கேன்கள் கொண்டு வரும் நபர்கள் மட்டுமின்றி, குடிநீர் உற்பத்தியாளரிடமும் சூரிய ஒளி படாமல் குடிநீர் கேன்களை வினியோகம் செய்யும்படி வேண்டுகோள் விடுப்பேன்.

ரூ.1 லட்சம் அபராதம்

சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பி.நீலமேகம்:-

சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக குடிநீர் கேன்கள் அல்லது குளிர்பானங்களில் பட்டு சூடாகும் போது அதில் டயாக்ஸின் என்ற நச்சுப்பொருள் உருவாகும். இந்த நச்சு பொருளோடு வெப்பம் காரணமாக பிளாஸ்டிக்கும் உருகுகிறது. இதனால் தண்ணீரோடு சேர்ந்து இதனையும் குடிக்கும் போது பல வகையான புற்று நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும் மனித உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும். அதனால் குடிநீர் மற்றும் குளிர்பானங்களை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்றால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தண்ணீர் கேனின் எண்ணிக்கைக்கு ஏற்ப அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அறிவுரையின்படியும் மாவட்டம் முழுவதும் குடிநீர் கேன்கள் விற்பனையை கண்காணித்து வருகிறோம். தாங்கள் வாங்கும் குடிநீர் கேன்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பொதுமக்கள் கவனித்து வாங்க வேண்டும். கடைகளில் விற்பனைக்காக குடிநீர் கேன்கள் மற்றும் குளிர்பானங்களை வைத்திருக்கும் போது அவைகள் வெயிலில் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story