மழை, பனிப்பொழிவால் வரத்து குறைவு: உழவர் சந்தைகளில் முருங்கைக்காய் விலை உயர்வு கிலோ ரூ.140-க்கு விற்பனை


மழை, பனிப்பொழிவால் வரத்து குறைவு:  உழவர் சந்தைகளில் முருங்கைக்காய் விலை உயர்வு  கிலோ ரூ.140-க்கு விற்பனை
x

மழை, பனிப்பொழிவால் வரத்து குறைந்துள்ளதால் உழவர் சந்தைகளில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.140 வரை விற்பனையானது.

சேலம்

சேலம்,

வரத்து குறைவு

சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக உழவர் சந்தைகளுக்கு தற்போது முருங்கைக்காய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

சில உழவர் சந்தைகளுக்கு அதன் வரத்து இல்லை. இதனால் முருங்கைக்காய் விலை உயர்ந்து உள்ளது. உழவர் சந்தைகளில் நேற்று முருங்கைக்காய் தரத்தை பொறுத்து கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3 டன் வரை....

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறும் போது, உழவர் சந்தைகளுக்கு சீசன் நேரங்களில் தினமும் முருங்கைக்காய் 7 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தற்போது மழை, பனிப்பொழிவு காரணமாக 3 டன் வரை முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. இதனால் அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது என்றனர்.

மேலும் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.18-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50-க்கும், சின்னவெங்காயம் ரூ.68-க்கும், பெரிய வெங்காயம் ரூ.35-க்கும், கத்திரிக்காய் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.44-க்கும், அவரை ரூ.45-க்கும், கேரட் ரூ.54-க்கும், மாங்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story