வால்பாறையில் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
வால்பாறையில் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்து உள்ளது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்து உள்ளது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பச்சை தேயிலை
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வந்தது. ஆரம்பத்தில் குறைவாகவும் பின்னர் படிப்படியாக மழை அதிகரித்தும் இருந்தது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும், நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் கடந்த ஜூலை 10-ந் தேதி சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. கடந்த 112 நாட்களாக சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியை தாண்டிய நிலையில் இருந்து வருகிறது.
வால்பாறை பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்த போதிலும் இடை இடையே நல்ல வெப்பமான காலசூழ்நிலை நிலவி வந்தது. இதனால் வால்பாறை பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை காலத்திலும் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்தே இருந்தது.
விளைச்சல் அதிகரிப்பு
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை நின்று தற்போது வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பகலில் நல்ல வெப்பமான காலசூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனால் தொடர்ந்து வால்பாறை பகுதியில் பச்சை தேயிலை இலைகள் துளிர்விட்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- வால்பாறையில் தற்போது நிலவி வரும் இதமான காலநிலை காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது. இலைகள் துளிர்விட்டு வளர்வதால் தேயிலை இலையை பறிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.