பாலமேடு பகுதியில் கொய்யா பழ விளைச்சல் அதிகரிப்பு - விலை சரிவால் விவசாயிகள் கவலை


பாலமேடு பகுதியில் கொய்யா பழ விளைச்சல் அதிகரிப்பு - விலை சரிவால் விவசாயிகள் கவலை
x

பாலமேடு பகுதியில் கொய்யா பழ விளைச்சல் அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்து உள்ளது.

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கொய்யா, மா, பப்பாளி, சப்போட்டா, நாவல், உள்ளிட்ட பழ வகை மரங்களின் தோப்புகள் உள்ளன.

இந்த பகுதிகளில் கடந்த சில வருடங்களாக அதிக அளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. ஆண்டிற்கு இரு முறை மட்டும் மகசூல் தரும் இந்த கொய்யா பழங்கள் சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலை தீர்க்கும் சிறந்த மருந்தாகவும் கருதுகின்றனர். பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த பழங்கள் மதுரை, நத்தம், திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது கொய்யா பழங்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் கொய்யா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கொய்யா விவசாயிகள் கூறுகையில்,

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பழ சந்தைக்கு கொய்யாப் பழங்கள் அதிகளவில் வருகிறது. இதனால் கொய்யா பழத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு மொத்த விற்பனைக்கு ஒரு கிலோ கொய்யா பழம் ரூ.7 முதல் 10-க்கு மட்டுமே விலைபோகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story