சொந்த தொழில் செய்ய கடன், மானியம் உயர்வு
சொந்த தொழில் செய்ய கடன், மானியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வேலையற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு மாநில அரசால் 25 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மனுதாரர் மொத்த திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் 10 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், இக்கடனை பெற சொத்துப்பிணையம் தேவை இல்லை. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுப்பிரிவு ஆண்களுக்கு மட்டும் அதிகபட்ச வயதுவரம்பு 45 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணையதள முகவரியில் தகவல்களை சரியாக பூர்த்தி செய்த பின்னர் பள்ளி மாற்றுச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் அல்லது உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்பட்டியல் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் பதிவிறக்கம் செய்து திட்ட அறிக்கை படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை அலுவலகத்தில் 2 படிவங்களாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் தகுதியின் அடிப்படையில் உரிய வங்கிக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி என்ற அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151-294057 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.