காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

காட்டு யானைகள்

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலா மரங்கள் உள்ளன. தற்போது சீசன் காரணமாக மரங்களில் பலா பிஞ்சுகள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து முள்ளூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன.

அவை அவ்வப்போது சாலைகளில் நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு உள்ளன.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

எனவே கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், யானைகளுக்கு தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. இதேபோல பழங்குடியின மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். தனியாகச் செல்லக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோர கிராமங்கள் மட்டுமின்றி காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக பலா மரங்கள் இல்லாத கொணவக்கரை, பர்ன்சைடு, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் உலா வந்த வண்ணம் உள்ளது.

1 More update

Next Story