குறுமிளகு விளைச்சல் அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரியில் குறுமிளகு விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பழங்குடியின கிராமங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் காபி, தேயிலை உள்ளிட்ட பண பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்த பயிர்களுக்கு இடையே ஊடு பயிராக பலா மரங்கள், சில்வர் ஓக் மரங்களை வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த மரங்களில் படர்ந்து வளரக் கூடிய குறுமிளகை பயிரிட்டு வருகிறார்கள். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக போதுமான மழை பெய்தது. இதனால் நிலத்தில் போதுமான ஈரப்பதம் உள்ளதுடன் குளிர்ந்த சீதோஷ்ண காலநிலையும், பகல் நேரங்களில் வெயிலுடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலையும் நிலவி வருகிறது.
இதனால் குறுமிளகு கொடிகள் செழித்து வளர்ந்து மரங்கள் மீது படர்ந்து உள்ளது. இதனால் குறுமிளகு விளைச்சல் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து கரிக்கையூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, வழக்கமாக மே மாதம் கடைசி முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு வடகிழக்கு பருவமழை காரணமாக குறுமிளகு விளைச்சல் அதிகரிக்கும். கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சீசனுக்கு முன்னதாகவே விளைச்சல் அதிகரித்து உள்ளது.
உலர வைக்காத பச்சை குறுமிளகு கிலோ ரூ.400-க்கும், நன்கு உலர வைத்த ஒரு கிலோ குறுமிளகு ரூ.600-க்கும் விற்பனை ஆகிறது. இதனை வியாபாரிகள் விளைநிலங்களுக்கே நேரில் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். தற்போது குறுமிளகு விளைச்சல் அதிகரித்து வருவதுடன், நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது என்றனர்.