காற்றாலைகளில் மின்உற்பத்தி அதிகரிப்பு
குமரி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி:
குமரி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆரல்வாய்மொழியில் காற்றாலை
குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், குமாரபுரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பழவூர், ராதாபுரம், நக்கநேரி, கோலியான்குளம், ஆவரைக்குளம் ஆகிய பகுதிகளிலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன.
இவற்றின் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 250 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலை உள்பட 1,650 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலை வரை அமைக்கப்பட்டு உள்ளன.
250 கிலோவாட் காற்றாலை மூலம் 4 ஆயிரம் யூனிட்டும், 500 கிலோவாட் காற்றாலை மூலம் 8 ஆயிரம் யூனிட்டும், 750 கிலோவாட் காற்றாலை மூலம் 12 ஆயிரம் யூனிட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,650 கிலோவாட் காற்றாலை மூலம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
மின் உற்பத்தி அதிகரிப்பு
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காற்று குறைவாக வீசுவதால் மின்உற்பத்தி மிக குறைவாக இருக்கும். தற்போது மே மாதம் 15-ந்தேதியை கடந்து விட்டதால் காற்று அதிகமாக வீசுகிறது. ஆகஸ்டு மாதம் வரை காற்று அதிகம் வீசும். இதனால் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் காற்று குறைவாக இருந்தது. இதனால் 500 கிலோவாட் காற்றாலையில் 1,000 யூனிட் வரைதான் மின் உற்பத்தி இருந்தது. அதே காற்றாலை தற்போது 3 ஆயிரம் யூனிட் வரை மின் உற்பத்தி செய்கிறது. இதே போல அனைத்து காற்றாலைகளிலும் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இன்னும் 15 நாட்கள் கழித்தால் ஒவ்வொரு காற்றாலையும் அதன் முழு திறனுக்கு ஏற்ப முழு கிலோவாட்டும் இயங்கி மின்உற்பத்தி செய்யும் என்று மின் உற்பத்தியாளர்கள் நம்புகிறார்கள்.
தற்போது மின் உற்பத்தி அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.