நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரிப்பு


நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை அதிகரிப்பு

கோயம்புத்தூர்

இன்றைய நவீன காலத்தில் ஜீன்ஸ், டி-சர்ட், சுடிதார் என மேலைநாட்டு துணி ரகங்கள் எத்தனை வந்தாலும், உள்நாட்டு சேலைக்கு என்றுமே மவுசு குறைந்தது இல்லை. அதிலும் கோடைகாலத்தில் கைத்தறி காட்டன் சேலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விடுகிறது.

காட்டன் சேலைகள்

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பத்தினர் கைத்தறி காட்டன் சேலைகளை தயாரித்து வருகின்றனர். ஆறு கெஜம், எட்டு கெஜம் அளவில் கெட்டியான நூலை கொண்டு அடர்த்தியான பார்டர் வைத்து இன்றைய காலத்துக்கு ஏற்ப சேலைகளை தயாரித்து வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் சேலைகள்தான் சவுத்காட்டன் என்றும், கோவை காட்டன் என்றும் உலகமெங்கும் விற்பனையாகி வருகிறது. இந்த ரகங்கள் ரூ.1,200 முதல் ரூ.2,500 வரை விற்பனையாகிறது.

கூடுதல் மவுசு

கோவை தவிர்த்து சென்னை, ஐதராபாத், கோழிக்கோடு, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட உள்நாட்டு நகரங்கள் மட்டுமின்றி கனடா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் கடந்த சில நாட்களாக ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கொல்கத்தா, கேரளாவிற்கு அதிகளவில் நெகமம் காட்டன் சேலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதில் எம்பிராய்டரிங், ஊடுருவல் மற்றும் போச்சம்பள்ளி ரகங்களுக்கு இளம்பெண்களிடம் கூடுதல் மவுசு உள்ளது. குறிப்பாக பார்டர் பெரிதாக உள்ள ரகங்களை அதிகம் விரும்புகின்றனர். இது தவிர காட்டன் சுடிதார் ரகங்களும் தயாரித்து ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேக்கம் இல்லை

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

நெகமம், காட்டம்பட்டி, வீதம்பட்டி, குள்ளக்காபாளையம், காணியாலாம்பாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், தாசநாயக்கன்பாளையம், வதம்பச்சேரி, ஜக்கார்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் கைத்தறி காட்டன் சேலைகள் தயாரிப்பு நடைபெறுகிறது. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சேலை தயாரிக்க குடும்பத்திற்கு 1½ நாள் ஆகும். ஒரு மாதத்திற்கு 18 சேலை வீதம் ஆண்டுக்கு 216 சேலைகள் தயாரிக்கின்றனர். ஆனால் தேக்கம் அடைவது இல்லை. அனைத்தும் விற்பனையாகிவிடுகிறது. தமிழகத்தில் மட்டும் விற்பனை குறைவாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story