உப்பு உற்பத்தி அதிகரிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல் உப்பு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்,
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல் உப்பு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. அதுபோல் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி சீசன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நடைபெறும். இந்த ஆண்டும் தற்போது திருப்பாலைக்குடி, சம்பை, பத்தநேந்தல் என மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களில் உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக ஜூன் மாதம் வரையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பின்னர் அவ்வப்போது லேசான மழை பெய்ய தொடங்குவதுடன் வெயிலின் தாக்கமும் சற்றே குறைந்து விடும். இதனால் உப்பு உற்பத்தியும் ஓரளவு குறைய தொடங்கும்.
உப்பு உற்பத்தி
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடைகால சீசன் முடிந்து 3 மாதங்கள் கழித்தும் வெயிலின் தாக்கம் தற்போது வரை குறையாததால் உப்பு உற்பத்தியும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருப்பாலைக்குடி, உப்பூர், பத்தநேந்தல், சம்பை ஆகிய பகுதிகளில் கல் உப்பு உற்பத்தி அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாத்திகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்புகள் அதிக வெள்ளை நிறத்தில் கிடைத்து வருகின்றன. இவ்வாறு பாத்திகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கல் உப்புகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டு பின்னர் லாரிகளில் ஏற்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 வரை விலை போவதாகவும் கூறப்படுகின்றது.