உப்பு உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைவு


உப்பு உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைவு
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

தொடரும் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

தொடரும் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழிலும் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆணைகுடி, தேவிபட்டினம் கோப்பேரிமடம், உப்பூர் திருப்பாலைக்குடி சந்தை பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களிலும் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்தி சீசன் தொடங்கிவிடும். செப்டம்பர் மாதத்தில் 2-வது வாரத்தில் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைந்து விடும்.

இந்த ஆண்டும் உப்பு உற்பத்தி சீசன் ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சீசன் தொடங்கியதில் இருந்தே உப்பு விளைச்சல் நன்றாக இருந்தது. குறிப்பாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளதால் உப்பு விளைச்சல் அதிகமாகவே இருந்தது.

விலை குறைவு

இந்த நிலையில் கோப்பேரிமடம் பகுதியில் அமைந்துள்ள உப்பள பாத்திகளில் கல் உப்பு உற்பத்தியும் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. கல் உப்பு லாரி மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து உப்பு வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாகவே மழையின் தாக்கத்தால் உற்பத்தி குறைவாக இருந்தது. இந்த ஆண்டு மழை முழுமையாக குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தியும் அதிகமாகவே இருந்தது.

மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் உப்பு உற்பத்தி அதிகமாகி வருவதால் ஒரு டன் ரூ.2500-2000-க்கு விலை போன கல் உப்பு தற்போது மேலும் விலை குறைந்து ஒரு டன் ரூ.1500-க்கு மட்டுமே விலை போகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரி மூலம் தூத்துக்குடியில் உள்ள கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மிஷின்களில் அரைத்து அயோடின் உப்புகளாக பேக்கிங் செய்யப்பட்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இதை தவிர கல் உப்புகள் ஆகவும் லாரிகளில் பல ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story