கிணத்துக்கடவில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

கிணத்துக்கடவில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வைரஸ் காய்ச்சல்
கிணத்துக்கடவு பகுதியில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வருகிறது. மறுபுறம், வைரஸ் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. அதாவது காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, இருமல் உள்ளிட்டவைகளால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் அதிக வைரஸ் காய்ச்சல் பகுதிகளை கண்டறிந்து தினசரி 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ்ந்த பணியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் டாக்டர்கள் சமீதா, அருண் பிரகாஷ், சிவச்சந்திரன், பிரித்திகா, பவானி, பிரபு, திலிப்குமார், கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரத்த பரிசோதனை
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா கூறியதாவது:-
வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், மற்றவருக்கும் பரவும் சூழ்நிலை உள்ளதால், அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். மாத்திரை, மருந்துகளை டாக்டர் ஆலோசனை இன்றி சாப்பிடக்கூடாது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம் தவிர நடமாடும் வாகனம் மூலமும் மருத்துவ சிகிச்சை மற்றும் ரத்த பரிசோதனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






