மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு
சீசன் தொடங்கியதால் புதுக்கோட்டையில் மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
மாம்பழம்
முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் மாம்பழத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. மாம்பழம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழம் தான். இருப்பினும் ஆங்காங்கே மாம்பழங்கள் விளைச்சல் காணப்படும். இந்த நிலையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. இதனால் கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கான வரத்து அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டையில் பழக்கடைகளில் மாம்பழங்கள் தற்போது அதிகமாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காணமுடியும். இதேபோல சாலையோரங்களிலும், தள்ளு வண்டி வியாபாரிகளும் மாம்பழங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே மாந்தோப்பில் விளையும் மாம்பழங்களும் விற்பனைக்காக கடைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. அந்தந்த தோட்டங்கள் முன்பும் மாம்பழம் விற்பனை நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கி சென்று வருகின்றனர்.
பழங்களின் விலை விவரம்
இதுகுறித்து புதுக்கோட்டை பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், ``சேலம், திருச்சியில் இருந்து மாம்பழங்கள் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதுதவிர உள்ளூர் விவசாயிகளும் மாந்தோப்பில் இருந்து மாம்பழங்களை மொத்தமாக பறித்து விற்று வருகின்றனர். தற்போது பங்கனப்பள்ளி 1 கிலோ ரூ.70-க்கும், இமாம்பசந்த் ரூ.140-க்கும், செந்தூரம் ரூ.70-க்கும், கல்லாமணி ரு.50-க்கும் விற்கப்படுகிறது. வரத்து இன்னும் அதிகரிக்கும் போது விலை மேலும் குறையும்'' என்றார்.
புதுக்கோட்டையில் ஒரு பழக்கடையில் விற்பனையான பழங்களில் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- ஆப்பிள் ரூ.200-க்கும், ஆரஞ்சு ரூ.120-க்கும், பச்சை திராட்சை ரூ.80-க்கும், பன்னீர் திராட்சை ரூ.100-க்கும், மாதுளம் ரூ.160-க்கும், சப்போட்டா ரூ.40-க்கும் விற்றது.
மாம்பழம் சீசன் தொடங்கிய நிலையில் அதனை பழுக்க வைக்க ரசாயன கல் பயன்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.