பூக்களின் விலை உயர்வு
பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
தமிழ் புத்தாண்டு இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி வழக்கமாக பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும். திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் எட்டரை, கோப்பு, புலியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தஞ்சை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. திருச்சி பூ மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களாக மல்லிகைப்பூ கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் இருப்பதால் மல்லிகைப்பூ செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுகளுக்கு பூக்களின் வரத்து குறைந்தது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், ரோஜாப்பூ கிலோ ரூ.200-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது.