விவசாய நிலங்களில் திருட்டு அதிகரிப்பு


விவசாய நிலங்களில் திருட்டு அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் திருட்டு அதிகரித்து உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோயம்புத்தூர்

விவசாய நிலங்களில் திருட்டு அதிகரித்து உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து குறைகளை கேட்டறிந்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுத்தனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் அளித்த மனுவில், மலையோர கிராமங்களில் காட்டுப்பன்றிகள் விவசாய பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

திருட்டு அதிகரிப்பு

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி அளித்த மனுவில், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் பகுதியில் விவசாய நிலங்களில் விவசாய பொருட்களை திருடிச் செல்லும் கும்பல் அதிகரித்து உள்ளது. கால்நடைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

கண்காணிக்க கேமராவுக்கு செல்லும் கேபிள்களை துண்டித்துவிட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி வருகிறார்கள். எனவே விவசாய நிலங்களில் திருட்டுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

நடவடிக்கை இல்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் இளங்கோவன் அளித்த மனுவில், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இது தொடர்பாக கேட்டால் அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பது இல்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.

விவசாயிகள் புறக்கணிப்பு

இந்த மனுவை வழங்கியதும் அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கை குறித்து பேசினார்கள். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மனுக்கள் மீது அதிகாரிகள் பதில் அளிக்க இல்லை என்று கூறி நேற்று நடந்த கூட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story