சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் இதமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஆனாலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கோயம்புத்தூர்
வால்பாறை


வால்பாறையில் இதமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஆனாலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.


இதமான கால நிலை


வால்பாறையில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளன. இதனால் பசுமை போர்த்தியது போல் இயற்கை எழில் மிகுந்து காணப்படுகிறது. தற்போது வால்பாறையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இதமான காலநிலை நிலவி வருகிறது.


ஜூன் மாதம் தொடங்கும் தென் மேற்கு பருவமழை ஆகஸ்டு மாதத்தில் மிக கனமழையாக இடைவிடாமல் பெய்யும். ஆனால் அது போதிய அளவு பெய்யாமல் அவ்வப்போது லேசான மழையாக பெய்து வருகிறது.


சுற்றுலா பயணிகள்


ஒரு சில நாட்களில் லேசான மழை பெய்கிறது. பகலில் கடும் வெயில் வாட்டுகிறது. இரவில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அந்த சூழலை அனுபவிக்க வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கேரள வனப்பகுதிகளுக்கு சென்ற காட்டு யானைகள் மீண்டும் வால்பாறை வனப்பகுதி நோக்கி வரத் தொடங்கி உள்ளது.


மேலும் குட்டிகளுடன் 30-க்கும் மேற்பட்ட யானைகள் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட எஸ்டேட் மற்றும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு நிற்கிறது.

அதிலும் குறிப்பாக நல்லமுடி பூஞ்சோலை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளான நல்லமுடி, ஆனைமுடி, முக்கோட்டு முடி ஆகிய சுற்று பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது.

எனவே வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


வனத்துறை எச்சரிக்கை


இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புகைப்படங்கள் எடுப்பது வனப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் இருக்கும் நீரோடைகளுக்கு சென்று குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

வாகனங்களில் செல்லும் போது வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story