வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
வால்பாறை
தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை
கோவை மாவட்டத்தில் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் சமவெளி பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலரும் குளிர்ச்சியான கால சூழ்நிலை உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.
இந்்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கூழாங்கல் ஆற்றில் குளித்தனர்
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கிய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, கூழாங்கல் ஆற்றில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சிலர் ஆபத்தை உணராமல் தடை செய்யப்பட்டு பகுதியிலும் இறங்கி குளித்தனர்.
இதேபோல வெள்ளமலை டனல் பகுதி, சோலையாறு அணை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நண்பர்களுடன் வந்த சிலர் பொது வெளியில் அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற விரும்ப தகாத செயல்களில் ஈடுபட்டதால் சுற்றுலா பணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.
போலீசார் கண்காணிப்பு
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
வால்பாறைக்கு சுற்றுலா வரும் பலரும் குடும்பத்துடன் கூழாங்கல் ஆற்றில் குளித்து செல்கின்றனர். ஆனால் அங்கு சிலர் அரைகுறை ஆடையுடன் மதுபோதையில் குளிக்கின்றனர். ஒருசிலர் தடை செய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளிப்பது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல சோலையாறு அணை, வெள்ளமலை டனல் பகுதியிலும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடும் சம்பவமும் நடந்து வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் உள்ள நாட்களில் சுற்றுலா தலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.