வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
வால்பாறை
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
கோடை விழா
மலைப்பிரதேசமான வால்பாறை சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளது. இங்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த மாதம் வெயில் தாக்கம் இல்லாமல் இருந்தது. மே மாதத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வந்தது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்ததால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர். தொடர் மழையால் வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கிறது. கடந்த மாத இறுதியில் 3 நாட்கள் வால்பாறை நகராட்சி சார்பில் கோடை விழா நடத்தப்பட்டது. மாணவிகளின் பரத நாட்டியம், கலைஞர்களின் தப்பாட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.
கண்டு ரசிப்பு
மேலும் வால்பாறை பகுதியை சேர்ந்தவர்களின் வளர்ப்பு நாய்களின் கண்காட்சி நடந்தது. தொடர்ந்து பாராகிளைடரில் பறக்கும் நிகழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் பாராகிளைடரில் பறந்து மகிழ்ந்தனர். மலர் அலங்காரத்தை கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். இதற்கிடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் வார விடுமுறை நாளான நேற்று வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் நீர்வீழ்ச்சி அருகில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு, பசுமையான தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்தனர். அங்கு மலைமுகடுகளை மோதி செல்லும் மேகமூட்டங்களை புகைப்படம் எடுத்து சென்றனர். இதேபோல் வால்பாறை நகராட்சி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கூழாங்கல் ஆறு, சோலையார் அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.