ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 15-வது நாளாக நீடிக்கிறது.
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 15-வது நாளாக நீடிக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்ததால் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கண்காணிப்பு
ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது.
இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்களை ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் கூடுவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 15-வது நாளாக நீடிக்கிறது.