கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 979 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,151 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 1,214 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதே போல் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து நேற்று 4-வது நாளாக வினாடிக்கு 70 கனஅடியாக நீடித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.71 அடியாக உள்ளது. மேலும், அணையில் இருந்து வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல், சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை முழுக் கொள்ளளவு நிரம்பி உள்ளதால், அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 36 கனஅடியாக உள்ளது.