வேலூர், விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக வேலூர், விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக வேலூர், விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் மாண்டஸ் புயலினால் நேற்று முன்தினம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதனால் ஏரி, குளம், ஆறு, குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வேலூர் பாலாற்றில் குறைந்த அளவில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக-ஆந்திர மாநில பாலாற்று பகுதிகள், வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் பாலாற்றின் கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. அதனால் வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பாலாறு மற்றும் வேலூர் பாலாற்றில் அதிகளவு வெள்ளம் நேற்று இரவு முதல் சென்று கொண்டிருக்கிறது.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சிறிதுநேரம் நின்று சீறி பாய்ந்து செல்லும் வெள்ளத்தை பார்த்து ரசித்து செல்கின்றனர். சிலர் பாலாற்றில் மீன்பிடித்தனர். பலர் தங்கள் செல்போனில் பாலாற்றில் வெள்ளம் செல்வதை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.
தொடர் மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது என்று கடந்து செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.