தொடர் மழை காரணமாகபரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றம்
தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி
தொடர் மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பரம்பிக்குளம் அணை
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வருகிறது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இதனால் கடந்த ஜூலை மாதம் அணை முழுகொள்ளளவை எட்டியது. இதற்கிடையில் போதிய மழை பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உபரிநீர் வெளியேற்றம்
சோலையார் அணையில் மின் உற்பத்தி நிலையம் 1-யில் மின் உற்பத்தி செய்யப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. -மேலும் சேடல் பாதை வழியாக வினாடிக்கு 3000 கன அடி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு வினாடிக்கு 1700 கன அடி நீர்வரத்து உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 70.62 அடியாக உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு 4500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து சுரங்கபாதை வழியாக சர்க்கார்பதிக்கு வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. அங்கு மின் உற்பத்தி செய்த பின் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோன்று ஆழியாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மழை அளவு
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சோலையார் 47, பரம்பிக்குளம் 10, ஆழியாறு 4, வால்பாறை 42 ., மேல்நீராறு 72, கீழ்நீராறு 63, காடம்பாறை 6, சர்க்கார்பதி 1, மணக்கடவு 11, தூணக்கடவு 3, பெருவாரிபள்ளம் 6, அப்பர் ஆழியாறு 4, பொள்ளாச்சி 3, நெகமம் 8.