Print | நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

கோயம்புத்தூர்

கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தொடர் மழை

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக குனியமுத்தூர் மாநகராட்சி பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி ஆகிய பள்ளி வளாகங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் மூலம் பள்ளிகளில் தேங்கிய தண்ணீரை உறிஞ்சி அகற்றினர்.

இதேபோல் கோவை- சத்தி ரோடு, புட்டுவிக்கி ரோடு, மசகாளி பாளையம், நீலிகோணம்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.

மழையால் கோவையில் பல சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. சாய்பாபாகாலனியில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. அதை கோவை வடக்கு தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.

வாய்க்கால் வெட்டும் பணி

கோவை-மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் அருகே வடமதுரை பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதை அறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் தன்னாசிபள்ளம் வரைை வாய்க்கால் வெட்டி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

இந்த பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் 2நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 3 மாதமாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்த நிலையில் மேட் டுப்பாளையம் ரோட்டில் தண்ணீர் தேங்காமல் இருக்க 2 பக்க மும் வாய்க்கால் வெட்டும் பணியை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

சித்திரைச்சாவடி நிரம்பியது

மழை காரணமாக பேரூருக்கு மேற்கே மத்வராயபுரம் கூடுதுறையில் நொய்யல் ஆறு உருவாகிறது. தற்போது மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நொய்யல் ஆற்றின் முதல் அணையாக சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிகிறது.

இங்குள்ள, தடுப்பணை பகுதியில் இருந்து வாய்க்கால் மூலம் பிரிக்கப்படுகின்ற தண்ணீர் குளங்களுக்கு செல்கிறது. இதனால் கோவை குளங்கள், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

குறிப்பாக செல்வசிந்தாமணி குளம், கோளராம்பதி குளம், கிருஷ்ணாம்பதி குளம் உள்ளிட்ட குளங்கள் மழையால் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

கோவை வாலாங்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மழையால் குளத்தில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியதால் கால்வா யை விட்டு தண்ணீர் வெளியேறி கோவை-திருச்சி சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் எந்த நேரமும், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சித்திரைச்சாவடி தடுப்பணை பகுதிக்கு வரும் பொதுமக்கள் தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவா, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story