கூடலூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பு:சுழற்சி முறையில் பச்சை தேயிலை கொள்முதல் -விவசாயிகள் பாதிப்பு


கூடலூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பு:சுழற்சி முறையில் பச்சை தேயிலை கொள்முதல் -விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் சுழற்சி முறையில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படும் என தொழிற்சாலை நிர்வாகங்கள் அறிவித்துள்ளது. இதனால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளைச்சல் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மாலை நேரத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் வறட்சியான காலநிலை பசுமையாக மாறியது. மேலும் காலை முதல் மாலை வரை பகலில் நன்கு வெயிலும், அதன் பின்னர் பெய்யும் மழையால் தேயிலைச் செடிகளுக்கு ஏற்றதாக உள்ளது. இதன் காரணமாக கூடலூர் பகுதியில் பரவலாக பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. கூடலூர் 2-ம் மைல் சாலீஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலையில் சுமார் 1600-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் தினமும் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கோடைகாலத்தில் கடும் வறட்சியால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை மிகக் குறைவாக வந்தது.

சுழற்சி முறையில் கொள்முதல்

இதனிடையே பரவலாக பெய்யும் மழையால் விளைச்சல் அதிகரித்துள்ளதால் சிறு விவசாயிகளிடம் சுழற்சி முறையில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படும் என தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் விளைந்த பச்சை தேயிலையை வெட்டி வீச வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து வருவாய் இழப்பும் ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோடை காலத்தில் விளைச்சல் குறைவாக இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள சூழலில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யாமல் உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளிடம் தொடர்ந்து கொள்முதல் செய்து பச்சை தேயிலை வரத்து குறைவாக உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வசதி இல்லை

இது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோவில் இருந்து 80 ஆயிரம் கிலோ வரை பச்சை தேயிலை வருகிறது. ஆனால் உற்பத்தி திறன் அதிகரிப்பு இல்லாததால் கொள்முதல் செய்யப்படும் பச்சை தேயிலை வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகளிடம் சுழற்சி முறையில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை தேயிலை அதிகமாக கொள்முதல் செய்தாலும் வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பக்கூடிய வசதியும் இல்லை. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story