தொற்று பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி முககவசம் அணியாவிட்டால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் என்றும், முககவசம் அணியா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா பரவத்தொடங்கி 2½ ஆண்டுகள் கடந்தபோதும், இன்னும் விட்டபாடில்லை.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி கொரோனா பரவத்தொடங்கியது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
3 அலைகளாக பரவிய இந்த கொரோனாவின் முதல் அலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 6,997 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று, ஒரே நாளில் கொரோனாவுக்கு 127 பேர் பலியானார்கள்.
இதையடுத்து 2-வது அலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரே நாளில்36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 3-வது அலையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. முககவசம் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டன.
கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு பிறகு அந்தந்த மாநிலங்களில் நிலவும் குழலுக்கு ஏற்ப கொரோனா விதிமுறைகளில் உரிய முடிவுகளை மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டன. மேலும், தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், முககவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்திய அதே நேரத்தில், முககவசம் அணியாவிட்டால் இனி அபராதம் கிடையாது என்றும் அறிவித்தது.
அதிகரிக்கும் பாதிப்பு
இதனால், முககவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்களுக்கு போடப்பட்டு வந்த ரூ.500 அபராதம் நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 22 என்ற அளவுக்கு குறைந்திருந்த நிலையில், அதன் பின்னர் மீண்டும் மெல்ல அதிகரிக்கத்தொடங்கியது.
கொரோனாவுக்கு உயிர் பலி தொடர்ந்து 90 நாட்கள் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 15-ந் தேதி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
முககவசம் கட்டாயம்
இதனால், மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முககவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், நேற்று ஒரே நாளில் 1,472 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நகர்ப்புறங்களில் அதிகரிப்பு
தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.
இத்தொற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால், கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
கட்டுப்படுத்த முடியும்
இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முககவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும்.
பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.