நாகையில் மத்தி மீன்கள் வரத்து அதிகரிப்பு


நாகையில் மத்தி மீன்கள் வரத்து அதிகரிப்பு
x

நாகையில் மத்தி மீன்கள் வரத்து அதிகரிப்பு

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை பகுதிகளில் மத்தி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் வருகிற ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள்.

குறைந்த தூரம் சென்று தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் பைபர் படகு மீனவர்களின் வலைகளில் தற்போது அதிக அளவிலான மத்தி மீன்கள் கிடைத்து வருகிறது.

மத்தி மீன் வரத்து அதிகரிப்பு

இதனால் நாகை கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் புரதச்சத்து நிறைந்த மத்தி மீனை அதிகம் பேர் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

நாகை, நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், கல்லாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து கடலுக்கு சென்ற பைபர் படகுகளில் மத்தி மீன் அதிகளவு கிடைத்துள்ளது. நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த பைபர் படகுகளில் கிடைத்த மத்தி மீன்களை மீனவர்கள் ஆர்வமாக பிரித்து எடுத்தனர்.

கேரளாவுக்கு ஏற்றுமதி

நாகையில் இருந்து அதிக அளவு மத்தி மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களில் பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள் கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர உள்ளூர் சந்தைகளிலும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்தி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் பைபர் படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்தி ரூ.100, அயிலை ரூ.200, குத்துவா ரூ.60, கோலா ரூ.120, சூரை ரூ.150, கவள ரூ.70, நவரை ரூ.160 ஆகிய மீன்கள் நாகை பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story