உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்
உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படத்தால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனா்.
''கலப்படம்... கலப்படம்... எங்கும் எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரை மூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...'' என்ற திரைப்பட பாடல் 1953-ம் ஆண்டு வெளிவந்த 'திரும்பிப்பார்' என்ற படத்தில் இடம்பெற்றது.
அந்த பாடல் வரிகள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.
அந்த அளவுக்கு உணவுப்பொருள் கலப்படம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், புதிய புதிய உத்திகளை கையாண்டு புதுவிதமான கலப்படத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அதிக லாபம்
கலப்படத்தை 3 வகைகளாக பிரிக்கின்றனர். இயற்கையான கலப்பட பொருட்கள், தெரியாமல் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்.
இதில் 3-வது வகையான தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் தான் இன்று பல உணவு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கலப்படம் செய்பவர்களின் முக்கிய நோக்கம், உணவு பொருட்களின் அளவை அதிகரித்து, அதிக லாபத்தை ஈட்டுவது. அதேபோல் உணவு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து, லாபத்தை அதிகரிப்பது. மக்களின் உடல்நலத்தை பற்றி இந்த சுயநலக் கும்பல் கவலைப்படுவது இல்லை. சமூக நலன்பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்வது இல்லை.
உணவில், குளிர்பானத்தில் கலப்படம் என்று அனைத்து பொருட்களுமே தற்போது கலப்படமாக மாறிவிட்டன. சரி, கலப்பட உணவு பொருட்களை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று நினைத்து, மருந்து சாப்பிடச் சென்றால், மருந்திலும் கலப்படம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
இவ்வாறு அதிகரித்து வரும் உணவு பொருள் கலப்படத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:-
சிறுவயதிலே உயிரிழப்பு
விருத்தாசலம் டாக்டர் அக்ஷயா ராஜன்பாபு: முந்தைய காலகட்டங்களில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்யும்போது நம் வீட்டிலே சமைத்து எடுத்துக்கொண்டு செல்வதுதான் வழக்கமாக இருந்தது. தற்போது வளர்ந்து வரும் நவீன உலகத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், போகும் இடங்களில் எல்லாம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்கள் மனதிலே பெரிதளவில் தோன்றிவிட்டது. சாப்பிட்டுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நாம் சாப்பிடும் உணவில் அளவுக்கு அதிகமாக கலப்படங்கள் அதிகரித்து வருவது தான் வேதனை.
உதாரணமாக நாம் அருந்தக்கூடிய குழம்பி (காபி) சிக்கிரி அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவே நம் உடலுக்கு கேன்சராக மாறக்கூடும். ஏழை எளிய மக்கள் பெரிதும் விரும்பக்கூடிய தேநீரில் கூட புளியங்கொட்டை போன்றவை கலப்படமாக கலந்து வைக்கிறார்கள். சமையலில் பெரிதளவு பயன்படுத்தக்கூடிய எண்ணெயில் கூட பாமாயில், குருடு ஆயில் போன்ற எண்ணெய் பெரிய பெரிய ஓட்டல்களில் கூட கலப்படம் செய்வதின் மூலம் மக்களுக்கு ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற கொடிய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. சாப்பிடக்கூடிய உணவு தின்பண்டங்களில் ருசி அதிகம் கொடுப்பதற்காக அஜின மோட்டோ அளவுக்கு அதிகமாக கலக்கிறார்கள். இதனால் கல்லீரல், வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதை காரணம் காட்டி ஆர்கானிக் பொருள் என்று கூறி, அதன் விலை பல மடங்கு உயர்வாகவே உள்ளது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் அதை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்கினாலும் அது உண்மையிலேயே ஆர்கானிக் முறையில் விளைந்ததா? என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. விவசாயிகள் விளைவிக்கக் கூடிய பொருட்களிலேயே உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் மாட்டுச்சாணம், பஞ்சகவ்வியம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவித்தாலே வருங்கால தலைமுறையினரை நம்மால் காப்பாற்ற முடியும். இதுபோல் அதிக கலப்படம் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உண்பதின் மூலம் மிகச் சிறுவயதிலேயே உயிரிழப்பு ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது.
குணப்படுத்தும் மருந்துகள் அளிப்பதில்லை
கொரக்கவாடி செல்லதுரை: கடந்த காலங்களில் ஊருக்கு ஒரு கடைகள், ஓட்டல்கள் இருப்பதே அரிது. ஆனால் தற்போது தெருவுக்கு பல கடைகள் முளைத்துள்ளன. மக்களும் வீட்டில் சமைப்பதை மறந்து, கடைகளில் சாப்பிடுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் சமைத்தாலும் அனைத்து விதமான பொருட்களையும் ரெடிமேடாக தான் வாங்கி சமைக்கின்றனர். முன்பு இஞ்சி, பூண்டு, மிளகாய் வத்தல் உள்ளிட்டவற்றை அம்மியில் வைத்து தான் அரைத்தனர். ஆனால் தற்போது அம்மிக்கும் வேலை இல்லை. அதற்கு மாற்றாக வந்த மிக்சிக்கும் பெரும்பாலும் வேலை இல்லை. அனைத்து குழம்பு பொடிகளையும் கடைகளில் வாங்கி வந்தே பயன்படுத்துகின்றனர்.
இதனால் பல புதிய புதிய நிறுவனங்களும் விதவிதமான பெயர்களில் குழம்பு பொடிகளை உற்பத்தி செய்து விற்கின்றனர். அதில் சுவையை கூட்டி பொதுமக்களை கவருவதற்காக அதிகளவில் கலப்படம் செய்கின்றனர். ஆனால் எந்த ஒரு நிறுவன உரிமையாளர்களும் மக்களின் நலனை யோசிப்பதில்லை. அனைத்தும் கார்ப்பரேட் போல் செயல்படுகிறது. உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மக்களை நோயாளி ஆக்கி, மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். அங்கும் டாக்டர்கள் உடனடியாக குணப்படுத்தக்கூடிய மருந்துகளை நோயாளிகளுக்கு அளிப்பதில்லை. மாறாக 2 அல்லது 3 தடவை அதே மருத்துவமனைக்கு சென்றால் மட்டுமே நல்ல மருந்துகளை அளிக்கின்றனர். அதனால் தற்போது அனைத்து துறைகளிலும் கலப்படம் புகுந்து விட்டது.
ஆர்டர் செய்வதில் சண்டை
கடலூர் சிந்து: இன்றைய காலத்தில் பலர் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விரும்புவதில்லை. காரணம், சிரமப்பட்டு பாத்திரங்கள் கழுவி சமைத்து வைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பாட்டை குறை கூறுவதால், ஓட்டல்களில் சாப்பிடுவதையே விரும்புகின்றனர். ஆனால் அங்கு சாப்பிடும் அனைத்து விதமான பொருட்களிலும் கலப்படம் இருப்பதை அறிந்தும், சிலர் சுவை அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தால் கடைகளில் சாப்பிட தான் விரும்புகின்றனர். மேலும் பலர் வீட்டில் இருந்தபடியே செல்போன் செயலி மூலம் ஆர்டர் செய்து உணவு வகைகளை வீட்டுக்கே வர வைக்கின்றனர்.
கடந்த காலங்களில் வீட்டில் சமைக்கவில்லை என்றாலோ, அல்லது தாமதமாக சமைத்தாலோ தான் கணவன்-மனைவி இடையே சண்டை வரும். ஆனால் வருங்காலத்தில் நீ சாப்பாடு ஆர்டர் செய்திருப்பாய் என்று நான் ஆர்டர் செய்யவில்லை என்று தான் தம்பதிகளிடையே பிரச்சினை வரும். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது மக்களுக்கு கலப்படம் மிகுந்த பொருட்கள் மீது தான் அதிக ஆர்வம் இருப்பதுதான். அதனால் தனிப்பட்ட ஒரு நிறுவனத்தை குறை கூறுவதை விட, மக்கள் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும்.
கலப்படம் இருந்தால் நடவடிக்கை
சிதம்பரம் பாலசுப்பிரமணியன்: இன்று நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் உணவுப் பொருட்களில் பெருமளவில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலில் தண்ணீர், நெய்யில் வனஸ்பதி, மைதா மாவில் மரவள்ளிக்கிழங்கு தூள், மிளகில் பப்பாளி விதை, அரிசியில் கல் என உணவு தானியங்களில் கலப்படம் செய்யப்படுகிறது. மேலும் எண்ணெய், டீத்தூள், துவரம் பருப்பு, மைதா மாவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலும் இதுபோன்று கலப்படம் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. இதனால் எந்த பொருளை வாங்கி பயன்படுத்தினால், என்னென்ன உடல் உபாதைகள் வருமோ என்ற அச்சத்திலே பாதி வாழ்க்கை கழிந்து விடுகிறது. ஆகையால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதந்தோறும் மளிகை கடைகள், முக்கிய நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு கலப்பட பொருட்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பி.சதீஷ்குமார்:-
கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத் துறையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கும் இதுபற்றிய போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதையும் எங்களால் முடிந்தளவு நவீன காலத்தில் வீடியோக்கள் மூலம் தெரிவித்து வருகிறோம். கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக கலப்படத்தை புகுத்தி கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்பை பார்க்கும்போது வியப்பாகவே இருக்கிறது.
அவர்கள் செய்வது தவறு என்று தெரியாமலேயே இதை தொடர்ந்து செய்கிறார்கள். நாங்களும் பாகுபாடு பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறோம். பொது மக்களும் உணவு கலப்படம் தொடர்பான புகார்களை 'தமிழ்நாடு புட் சேப்டி கன்சூமர்' (tamilnadu food safety consumer) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தெரிவிக்கலாம்.