உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்


உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அதிகரித்து வரும் உணவு பொருள் கலப்படத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:-

திண்டுக்கல்

''கலப்படம்... கலப்படம்... எங்கும் எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரை மூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...'' என்ற திரைப்பட பாடல் 1953-ம் ஆண்டு வெளிவந்த 'திரும்பிப்பார்' என்ற படத்தில் இடம்பெற்றது.

அந்த பாடல் வரிகள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

அந்த அளவுக்கு உணவுப்பொருள் கலப்படம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், புதிய புதிய உத்திகளை கையாண்டு புதுவிதமான கலப்படத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அதிக லாபம்

கலப்படத்தை 3 வகைகளாக பிரிக்கின்றனர். இயற்கையான கலப்பட பொருட்கள், தெரியாமல் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்.

இதில் 3-வது வகையான தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் தான் இன்று பல உணவு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கலப்படம் செய்பவர்களின் முக்கிய நோக்கம், உணவு பொருட்களின் அளவை அதிகரித்து, அதிக லாபத்தை ஈட்டுவது. அதேபோல் உணவு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து, லாபத்தை அதிகரிப்பது. மக்களின் உடல்நலத்தை பற்றி இந்த சுயநலக் கும்பல் கவலைப்படுவது இல்லை. சமூக நலன்பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்வது இல்லை.

உணவில், குளிர்பானத்தில் கலப்படம் என்று அனைத்து பொருட்களுமே தற்போது கலப்படமாக மாறிவிட்டன. சரி, கலப்பட உணவு பொருட்களை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று நினைத்து, மருந்து சாப்பிடச் சென்றால், மருந்திலும் கலப்படம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இவ்வாறு அதிகரித்து வரும் உணவு பொருள் கலப்படத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:-

விஷமாகும் உணவு

ஓய்வுபெற்ற ரெயில்வே முதன்மை பயணச்சீட்டு ஆய்வாளர் ஏசுராஜ் (திண்டுக்கல்) :- உணவு பொருட்களில் கலப்படம் செய்வது சர்வசாதாரணமாகி விட்டது. எந்த பொருளை வாங்கினாலும் அது தரமானதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அனைத்து பொருட்களிலும் எளிதில் கலப்படம் செய்து விடுகின்றனர். இத்தகைய சமூகவிரோத குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களும் விலை குறைவு என்பதற்காக பொருட்களின் தரத்தை பார்க்காமல் வாங்கக் கூடாது. இதில் சாதாரண மக்கள் தான் கலப்பட பொருட்களால் அதிக அளவில் ஏமாற்றப்படுகின்றனர். எனவே சாதாரண மக்களும் கலப்பட பொருட்களை கண்டுபிடிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மளிகை பொருட்கள்

குடும்ப தலைவி சுகன்யா (திண்டுக்கல்) :- மளிகை பொருட்களில் கலப்படம் செய்வதை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. உணவு தயாரித்த பின்னர் சுவையை வைத்தே, பொருட்களில் கலப்படம் செய்ததை கண்டுபிடிக்க முடிகிறது. மளிகை பொருட்களில் கலப்படம் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி? என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலப்பட பொருட்களை முற்றிலும் தடுப்பது அரசு அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது. கலப்பட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மட்டுமின்றி சப்ளை செய்தவர்கள் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கலப்பட பொருட்களை தடுக்கலாம்.

நோய்களுடன் போராட்டம்

கல்லூரி மாணவி ஜெனித்தா (கொசவப்பட்டி) :- உணவு பொருட்களில் கலப்படம் செய்வது மிகவும் ஆபத்தான செயல் ஆகும். ஒருசிலரின் பேராசையால் கலப்பட பொருட்களை, மக்கள் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் புற்றுநோய் உள்பட பல நோய்களுடன் போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் இளையதலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எதிர்கால சமுதாயம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு, கடைகளில் தரமான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாம்பழம், வாழைப்பழம், தர்பூசணி போன்றவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. அது தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்தாலும் தடுக்க முடியவில்லை. உணவில் கலப்படம் செய்வதற்கு அஞ்சும் வகையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை இருந்தால் மட்டுமே கலப்படம் இல்லாத பொருட்கள் கிடைப்பது சாத்தியம் ஆகும்.

மளிகை கடைக்காரர் அருள் (நவாமரத்துப்பட்டி) :- உணவு பொருட்களில் கலப்படத்தை தடுப்பது காலத்தின் அவசியம். மக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க முயற்சி செய்வதால், கலப்பட பொருட்கள் வந்துவிடுகின்றன. எனவே விலை அதிகமாக இருந்தாலும் தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். தரமான பொருட்களை மக்கள் கண்டறிந்து வாங்க தொடங்கினால், கலப்பட பொருட்களை ஒழித்து விடலாம். அதேபோல் வியாபாரிகளும் சமுதாய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

கிரிமினல் வழக்கு

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன்:- உணவு பொருட்களில் கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு நிறுவனத்தினர், வினியோகஸ்தர்கள், வியாபாரிகளுக்கு கலப்பட பொருட்களை விற்பதால் ஏற்படும் பாதிப்பு, கலப்படம் செய்வோருக்கு கிடைக்கும் தண்டனைகளை பற்றி விளக்கி வருகிறோம். இதேபோல் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மேலும் கலப்படம் இல்லாமல் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று கண்காணித்து வருகிறோம். அதன்மூலம் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட சோதனையில் கலப்பட பொருட்களை விற்ற 16 பேர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கார்பைட் கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்த 30 வியாபாாிகள், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்ற 114 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் பொதுமக்களும் உணவு பொருட்களை வாங்கும் போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தரமான பொருட்களை கண்டறிந்து வாங்கினாலே கலப்பட பொருட்களை தடுத்து விடலாம். கலப்பட பொருட்களை விற்போர் மீது புகார் செய்ய வேண்டும். உணவு கலப்படம் தொடர்பான புகார்களை 9444042322 என்ற செல்போன் எண்ணிலும், 'தமிழ்நாடு புட் சேப்டி கன்சூமர்' (tamilnadu food safety consumer) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-------------

கலப்படத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்


எந்தெந்த உணவு பொருளில், என்ன மாதிரியான பொருளை கலப்படம் செய்கிறார்கள் என்ற விவரம் வருமாறு:-

உணவு பொருட்கள் - கலப்படம் செய்யப்படும் பொருட்கள்

தானியங்கள் - கற்கள், களை விதைகள், சேதம் அடைந்த தானியங்கள், தூசி

நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி - ஸ்டார்ச் பவுடர், மசித்த உருளைக்கிழங்கு, டால்டா

பால் அல்லது தயிர் - ஸ்டார்ச் தூள், தண்ணீர்

டீத்தூள் - செயற்கை நிறங்கள்

காபி தூள் - புளியங்கொட்டை தூள் அல்லது சிக்கரி

பருப்பு வகைகள் - குரோமேட், ரசாயனம் மற்றும் சாயங்கள்

சமையல் எண்ணெய் - கனிம எண்ணெய், செயற்கை நிறங்கள், ஆமணக்கு எண்ணெய்

மிளகாய், மல்லி தூள் - சிவப்பு செங்கல்தூள், ஈய உலோகத்தூள், சாணப் பொடி

கடுகு - அர்ஜெமோன் விதைகள்

மிளகு - உலர்ந்த பப்பாளி விதைகள்

மஞ்சள் தூள் - தொழில்துறை சாயம், மெட்டானில் மஞ்சள் சாயம், சுண்ணாம்புத் தூள்

தேன் - வெல்லப்பாகு, சர்க்கரை

------


கலப்படம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை?

* சாப்பிடத் தகுதியற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், முதலில் அந்த பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு, விளக்கம் கேட்கப்படும். அவர்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அபராதம், கடைக்கு சீல் வைக்கப்படும்.

* 2-வது முறையும் சம்பந்தப்பட்ட நபர் கலப்படம் செய்வதில் ஈடுபட்டால், அந்த பொருள் மாதிரி உறுதி செய்யப்பட்டு, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். அவருடைய கடை மூடப்படுவதோடு, சிவில் கோர்ட்டு மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்.


Next Story