இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு -மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
குலசேகரபட்டினத்தில் சிறந்த ஏவுதளம் உருவாக வாய்ப்பு இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் காந்தி உலக மையத்தின் சார்பில் மண்ணும், மரபும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவுக்கு பிறகு உலகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. கொரோனா சமயத்தில் பல தொழில்கள் மந்த நிலையை அடைந்தாலும், விண்வெளித்துறையில் இந்த 2½ வருடங்களில்தான் மிக அதிகமாக செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதனை தாண்டி வருங்காலங்களில் இன்னும் அதிகமாக அனுப்பிட வாய்ப்பு உள்ளது.
நமது தமிழ்நாட்டிலே, இந்தியாவிலேயே ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்து குலசேகரபட்டினத்தில் வரக்கூடிய ஏவுதளம் உலக அளவிலேயே சிறப்பான ஏவுதளமாக உருவாக வாய்ப்பு உள்ளது. அறிவியல் சார்ந்து மிகச்சிக்கனமாக அங்கிருந்து ஏவுகனைகளை அனுப்ப வாய்ப்புகள் இருக்கிறது.
சிறு செயற்கை கோள்களை நாமும் செய்வதற்கு வாய்ப்புகள் அங்கு உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும்போது எல்லா அங்கங்களையும் ஒருங்கிணைந்த ஒரு புது இந்திய விண்வெளி என்ற நிலைமை வர வாய்ப்புகள் உள்ளது.
இப்போது இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து உள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு உலகளவில் ஒரு சிறப்பான இடத்தை நாம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.