சுதந்திர தின விழாவில் 313 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்


சுதந்திர தின விழாவில் 313 பேருக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

ஈரோடு

ஈரோடு-

சுதந்திர தின விழாவில் 313 பேருக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ்

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திரதின விழா வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் அரசு துறைகள் மற்றும் தொண்டு அமைப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் பி.சண்முகம், ராஜாபிரபு, மசூதாபேகம், ஜீவானந்தம், முருகையன், கதிரவன் (போக்குவரத்து), லயோலா இஞ்ஞாசி மேரி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சுரேஷ்குமார் உள்பட 53 போலீசார் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.

அரசு துறைகள்

வனத்துறை சார்பில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைக்க சிறப்பாக பணியாற்றியதற்காக வனச்சரகர் ரவீந்திரநாத், வனச்சரகர் செங்கோட்டையன் உள்பட 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுபோல் முன்னாள் படைவீரர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, குடும்ப நலத்துறை, சுகாதாரப்பணிகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், சித்த மருத்துவத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், கருவூலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைதுறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, நில அளவைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஆகிய துறை பணியாளர்கள், அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொண்டு அமைப்புகள்

தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் பிரிவில் ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் நிர்வாகிகள் எம்.சி.ராபின், சாரல் கணேசன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர். சக்தி மசாலா நிறுவனங்களின் சமூக செயல்பாட்டுக்காக நிறுவன தலைவர் பி.சி.துரைசாமி, இயக்குனர் சாந்திதுரைசாமி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.

அட்சயம் அறக்கட்டளை, ஈரோடு சிறகுகள் உள்பட 24 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாராட்டு சான்றிதழ் பெற்றனர். ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் சிவசங்கரன், ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தின் சத்துணவு அமைப்பாளர் நிர்மலா உள்பட 313 பேர் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணியிடம் இருந்து பாராட்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எல்.மதுபாலன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மற்றும் அந்தந்த துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story